Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

வெள்ளி, 31 ஜூலை, 2015

கலாம் பெயரைச் சொல்லி துடிக்கும் லட்சக்கணக்கான இதயங்கள்.. !

''இதுவரை எத்தனையே உயர் தொழில்நுட்ப கருவிகளை பல விஞ்ஞானிகளோடு இணைந்து நாட்டுக்காக தயாரித்துள்ளீர்கள்.. இந்தத் தயாரிப்புகளிலேயே உங்களுக்கு மிகவும் பிடித்தது எது, எதைத் தயாித்ததற்காக நீங்கள் மிக அதிகமாக பெருமை அடைந்தீர்கள்...''? ஒரு சந்திப்பில் இது டாக்டர் அப்துல் கலாமிடம் கேட்கப்பட்ட கேள்வி. அக்னி, பிருத்வி, த்ரிசூல், ஆகாஷ், நாக் உள்ளிட்ட ஏவுகணைகள், பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ரக ராக்கெட்டுகள், அர்ஜூன் ராணுவ டாங்கிகள், எல்சிஏ போர் விமானங்கள், செயற்கைக் கோள்கள், அணு குண்டு.... என வகை வகையான ஆயுதங்களைத் தயாரித்தவரிடம் இருந்து நாம் என்ன பதிலை எதிர்பார்த்திருப்போம்? ஏவுகணை, அணு குண்டு என்பதைத் தானே.. ஆனால், கலாம் சொன்னார்... ''நான் மிகப் பெருமையாக கருதுவது ஊனமுற்ற குழந்தைகள் பயன்படுத்த எடையில்லாத காலிபர் ஷூக்களைத் தயாரித்ததைத் தான்'' என்றார்.
போலியோவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த இரும்பு caliperகள் முன்பு மிக எடையுடன் இருந்தன. இந் நிலையில் ஏவுகணைகளின் எடையைக் குறைக்க கார்பன்- கார்பன் பாலிமர்கள் மற்றும் glass filled polypropylene என்ற ரசாயனம் கொண்ட பல பகுதியை கலாம் தலைமையிலான Defence research and development organisation (DRDO) விஞ்ஞானிகள் தயாரித்தனர். இந்த எடை குறைவான அதே நேரத்தில் மிக வலுவான இந்த கார்பன் பாலிமர் மெட்டீரியல்களைக் கொண்டு காலிப்பர் ஷூக்களைத் தயாரித்தால் ஊனமுற்ற குழந்தைகளுக்கு மிக உதவியாக இருக்குமே என்ற கலாமுக்கு யோசனை எழ, உடனே அது குறித்து ஹைதராபாத்தில் உள்ள நிஜாம் இன்ஸ்டியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் அமைப்பின் தலைவரான டாக்டர் நரேந்திரநாத்தைக் கூப்பிட்டுச் சொன்னார். அவரும் இந்த யோசனையை செயல்படுத்தலாம் என ஆர்வம் தெரிவிக்க, உடனடியாக மத்திய அரசிடம் பேசி டி.ஆர்.டி.ஓவிடம் இருந்த அந்தத் தொழில்நுட்பத்தை நிஜாம் இன்ஸ்டியூட்டுக்கு இலவசமாக வழங்கினார். கூடவே சில டிஆர்டிஓ விஞ்ஞானிகளையும் அங்கே அனுப்பி மருத்துவர்களுடன் இணைந்து அந்த காலிப்பர்களை வடிவமைக்க வைத்தார்.
இதையடுத்து மேலும் பல காலிப்பர்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் இந்தத் தொழில்நுட்பம் தரப்பட்டது. இதனால் இந்த காலிப்பர்களின் எடை 3 கிலோவில் இருந்து 300 கிராம் ஆனது. அதே நேரம் இது இரும்பை விட அதிக உறுதியானது. இப்போது பெரும்பாலான போலியோ பாதித்த குழந்தைகள் பயன்படுத்தும் இந்த காலிப்பர்கள் அக்னி ஏவுகணையின் முனைப் பகுதியில் பயன்படுத்தப்படும் அதே பொருளால் தான் செய்யப்படுகின்றன. நாட்டின் பாதுகாப்புக்காக உருவாக்கப்படும் ஆயுதங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தை போலியோ தாக்குதலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தந்து காலிப்பர்களின் எடையைக் குறைத்து அந்தக் குழந்தைகளின் சிரிப்பில் பேரானந்தம் அடைந்த மனிதர் தான் அப்துல் கலாம். அதே போல இதயத்திலிருந்து ரத்தத்தை எடுத்துச் செல்லும் முக்கிய ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்க உதவும் ஸ்டென்ட்களை இந்தியாவிலேயே மிகக் குறைந்த விலையில் தயாரிக்க வைத்தவரும் கலாம் தான்.
1990களில் ஒரு ஸ்டென்ட்டின் விலை ரூ. 1.5 லட்சம் என்ற நிலை இருக்க, ஆயுத தயாரிப்புக்காக உருவாக்கப்பட்ட ஒரு தொழில்நுட்பம் மூலம் இதை மிகக் குறைத்த விலையில் தயாரிக்கலாமே என்ற யோசனையை ஹைதராபாத்தைச் சேர்ந்த கேர் குரூப் ஆப் ஹாஸ்பிடல்ஸ் தலைவர் டாக்டர் சோமராஜூவுடன் இணைந்து செயல்படுத்தினார் கலாம். இதன் மூலம் வெறும் ரூ. 10,000க்கு ஸ்டென்ட்டை உருவாக்கினார் கலாம். 'K-R stent' (Kalam-Raju-Stent) என அழைக்கப்படும் இந்த விலை குறைவான ஸ்டென்ட் மூலம் இப்போது நாட்டில் லட்சக்கணக்கான இதயங்கள் துடித்துக் கொண்டிருக்கின்றன. ஒடிஸ்ஸாவின் பாலாசூர் மாவட்டத்தை ஒட்டி வங்கக் கடலில் அமைந்துள்ள சிறிய தீவு வீலர் ஐலண்ட். நமது ஏவுகணைகளின் சோதனை நடப்பது இங்கே தான். இந்தத் தீவில் உள்ள டிஆர்டிஓ மையத்தில் தங்கியபடி விஞ்ஞானிகளுடன் இணைந்து ஏவுகணைகள் ஆராய்ச்சியில் ஈடுபடுவதில் கலாமுக்கு அலாதி பிரியம்.
இந்தத் தீவுக்கு ஏராளமான வகை குருவிகள் வந்து செல்வதை பார்த்த கலாம் அங்கே ஆயிரக்கணக்கான மரங்களை நட வைத்து தீவையே பச்சை பசேல் என்று மாற்றியும் காட்டினார். இப்போது அங்கு வழக்கத்தை விட அதிகமான குருவிகள் சத்தம். கலாம் அண்ட் டீம் உருவாக்கிய ஏவுகணைகளில் மிக மிக முக்கியமானது பிரமோஸ் ஏவுகணை. இந்திய- ரஷ்ய கூட்டுத் தயாரிப்பான இந்த ஏவுகணைக்கு இணையான ஏவுகணை இதுவரை இல்லை. ஏவுகணைகளில் இருவகை உண்டு. Cruise missile, Ballistic missile. க்ரூயிஸ் மிசைல்கள் குறைந்த தூரம் சென்று தாக்குபவை. புறப்பட்ட இடத்திலிருந்து குறி வைக்கப்பட்ட இடம் நோக்கி செல்பவை. இவற்றின் வேகம் குறைவு. பாலிஸ்டிக் மிசைல்கள் நெடுந்தூரம் சென்று தாக்குபவை. முதலில் வானை நோக்கி எழும்பி, பூமிக்கு சில நூறு கி.மீ. தூரம் மேலே சென்று பின்னர் குறி வைக்கப்பட்ட இடம் நோக்கி அதி வேகத்தில் பாய்பவை. இவை கண்டம் விட்டு கண்டம் பாயும் ரகத்தை சேர்ந்தவை. ஆனால், பிரமோஸ் ஏவுகணை தான் உலகிலேயே மிக அதி வேகத்தில் செல்லக்கூடிய க்ரூயிஸ் மிசைல். 290 கி.மீ. தூரம் வரை சென்று தாக்கும் இந்த ஏவுகணை மணிக்கு 1225 கி.மீ. வேகத்தில் செல்லக் கூடியது. அதாவது 290 கி.மீ. தூரத்தை 15 நிமிடங்களில் சென்று தாக்கும். இந்த ஏவுகணையை வீழ்த்தக்கூடிய Anti-Missile defence system ஏதும் இதுவரை இல்லை என்பது இதன் சிறப்பம்சம். டாக்டர் அப்துல் கலாம் தலைமையில் டாக்டர் சிவதாணு பிள்ளை, ரஷ்ய ஏவுகணை ஆராய்ச்சி மையத்தின் டாக்டர் யெவ்ரமோவ், டாக்டர் லியோநோவ் ஆகிய நால்வரும் இணைந்து உருவாக்கியது தான் பிரமோஸ். இந்தியாவின் பிரமபுத்திரா, ரஷ்யாவின் மாஸ்கோ நதி ஆகிய பெயர்களை சேர்த்துத் தான் 'பிரமோஸ்' என இதற்கு பெயர் சூட்டினார் அப்துல் கலாம். (இந்த ஏவுகணையின் வேகத்தை அதிகப்படுத்தி இதை Supersonic Cruise missile என்ற நிலையில் இருந்து Hypersonic Cruise missile என்ற நிலைக்கு தரம் உயர்த்த வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கூறியிருந்தார் கலாம். அவரது யோசனைப்படி இதன் வேகத்தை அதிகப்படுத்தும் சோதனைகள் கடந்த சில காலமாக நடந்து வருகிறது. கடந்த மே மாதம் 8 மற்றும் 9ம் தேதிகளில் வீலர் ஐலண்ட் தீவில் நடந்த இந்தச் சோதனைகள் பெரும் வெற்றி அடைந்தன. அதாவது 8ம் தேதி முதல் ஏவுகணை தாக்கிய அதே இடத்தை 9ம் தேதி ஏவப்பட்ட பிரமோஸ் ஏவுகணை அட்சரம் பிசகாமல் மிகத் துல்லியமாகத் தாக்கியது) செயற்கைக் கோள்கள் தொழில்நுட்பத்திலும் கலாமுக்கு அதீத ஆர்வம் உண்டு. ஐஆர்எஸ், இன்சாட் செயற்கைக் கோள்களில் ஆரம்பித்து சமீபத்தில் இந்தியா நிலவுக்கு அனுப்பிய சந்திரயான், செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய மங்கள்யான் வரை கலாமுக்கும் பங்கு உண்டு. செவ்வாய் கிரகத்துக்கு 2018ம் ஆண்டில் இந்தியா அனுப்ப திட்டமிட்டுள்ள மங்கள்யான் 2 விண்கலத்துக்கு அப்துல் கலாமின் பெயரை சூட்டலாமே!


நன்றி  -ஏ.கே.கான்

Read more at: http://tamil.oneindia.com/editor-speaks/abdul-kalam-was-very-proud-making-lightweight-calipers-polio-patients-232302.html

0 கருத்துகள் :

கருத்துரையிடுக